மி
ழ்
முக்கிய பக்கங்கள்
நிர்வாகம்

திண்ணைப் பள்ளி

அன்பிற்கினியோரே,
முதற்கண் வணக்கம்.

எம் பெயர் என்.எஸ்.நாராயணன். கடல்கடந்த சீமைத் தீவான சிங்கப்பூரின் குடிமகனான இவன், தம் ஆரம்பக்கால இளந்தளிர்க் கல்விச் சீர்தனை, வெற்றியூர் என்னும் சிற்றூர் திண்ணைப் பள்ளியில் பெற்றான்.

இவன் பெற்றது, கல்விச்செல்வம்! அது விலைமதிப்பற்ற இறைக் கொடை! முதன் முதலில், அரிசியில் எழுதிப் பயின்ற "அ" "ஆ" என்னும் எழுத்துகள்தாம், அம்மா, அன்பு, அறிவு, அன்னம், ஆலயம், ஆண்டவன் எனப் பிறவிப் பயனாய்ப் பெற்றவற்றை ஈன்று தந்தன.

ஈராண்டு திண்ணைப் பள்ளி மாணவனாயிருந்து, ஆரம்பப் பள்ளியின் முதலாம் தொடக்க நிலையில் சேர்ந்து பயில, பிறந்த ஊருக்கே இவன் திரும்பினான்.

தமிழ்மொழியின் தேன்சுவை ருசி கண்டவன், அதை அள்ளிப் பருகியதன் கிறக்கத்திலேயே கிடக்கத், தொடர்ந்து தமிழ் நூல்களைப் படிக்கத் தொடங்கினான். அது, அவன் பதினெட்டாம் வயது வரை தொடர்ந்தது.

நான்கு அதிகாரத்துவ மொழிகள் கொண்ட சிங்கப்பூரில், ஆங்கிலமும் தமிழும் கட்டாயப் பாட மொழிகள். அதனுடன், தேசிய மொழியாக அனுசரிக்கப்பட்ட மலாய் மொழியையும் கற்றான்.

தமிழ்மொழியைப் பன்னெடுங்காலம் கற்றுணர்ந்ததால், அந்த மொழி மீது இவனுக்கு ஏற்பட்ட பேராவல், கட்டுக்கடங்காது வளரத் தொடங்கிற்று.

அதன் வெளிப்பாடாக, பதினைந்தாவது வயது முதலே சிங்கப்பூர் தமிழ் நாளேடான "தமிழ் முரசு"வில் "பிருந்தாவனம்" எனும் புனைபெயரில் சிறுகதைகள் எழுதத் தொடங்கினான்.

பின்னர், சிங்கப்பூர் வானொலிச் சேவையின் தமிழ்ப் பிரிவான ஒலிவழி நான்கில், படைப்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்ட குரல் தேர்வில் தேர்ச்சி பெற்று, பல தேர்வுத் தாள்கள் எழுதி, கடைசியில் தனி ஒருவனாக வானொலி நிலைய அறிவிப்பாளனாக பணியமர்த்தப்பட்டான்.

வானொலி நிலையம், கற்பனைக்கும் மொழி நுட்பத்திற்கும் பிறப்பிடமாக விளங்கியது. அறிவிப்பு, நாடகம், விளம்பரம், செய்தி வாசித்தல், சமூக நாடகத் தயாரிப்பு எனப் பல துறைகளில் அனுபவம் பெற்றான்.

அந்தக் காலகட்டத்தில், வானொலித் தமிழ்ப் புழக்கம் அப்பழுக்கற்ற, தூய நற்றமிழாகவே விளங்கியது.

மாணவப் பருவத்திலிருந்து சுமார் இருபது ஆண்டுகள், நற்றமிழிலேயே பேச, எழுத, சிந்திக்கக் கற்றான்.

அதனைத் தொடர்ந்து, "தமிழ் முரசு" நாளேட்டில் ஐந்தாண்டுகள் பணியாற்றி, செய்தியாளராகவும் எழுத்தாளராகவும் தமிழ்மொழிக்குப் பட்டைத் தீட்டினான்.

அந்தத் தமிழ்மொழிக் காதல் இன்றளவும் இருப்பதால்தான், இணையத் தளத்தில் தமிழ்ச் சேவையைத் தொடரும் எண்ணம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வேற்றுமொழிக் கலப்பின்றி, அறிவுச் செழுமை மிகு தகவல்களை நற்றமிழில் எழுதும் படைப்புகளை இத்தலத்தில் இடம்பெறச் செய்ய ஆவலுடன் இருக்கிறோம்.

2004ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் செம்மொழி எனும் பெருமை பெற்ற தமிழ்மொழி, இன்னும் பல நூறாண்டுகள் மாண்புடன் வாழ வேண்டும்.

அதை நினைவில் நிறுத்தி, தமிழ் ஆர்வமுடையோர் அனைவரும் இந்தத் தலத்திற்கு ஆதரவு தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.