குறத்தி தன் மலைவளம் கூறல்
5/8/20241 min read
குற்றால நகரின் தெருவில் வரும் குறத்தி குற்றாலநாதரின் பெருமைகளைப் பாடிக்கொண்டு வருகின்றாள். அவளை வசந்த வல்லி பார்க்கின்றாள். மகிழ்ச்சியோடு குறத்தியை அழைக்கின்றாள். குறத்தியிடம் அவள் மலை வளத்தைக் கூறுமாறு கேட்கின்றாள். குறத்தி குற்றால மலையாகிய தன் மலையின் வளங்களைக் கூறுகின்றாள். ஓசை நயம் மிகுந்த அப்பாடல்களில் ஒரு பாடலைப் பார்ப்போமா?
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார்
கமன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்
தேன் அருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே
(பாடல் 54: 1)
(வானரம் = ஆண்குரங்கு; மந்தி = பெண்குரங்கு; வான் கவிகள் = வான் உலகில் வாழும் தேவர்கள்; கானவர் = வேடர்; விழி எறிந்து = கண்களால் ஏறெடுத்துப் பார்த்து; கமனசித்தர் = வானின் வழியாகச் செல்லும் சித்தர்கள்; காயசித்தி = காட்டு மூலிகைகள்; விளைப்பர் = வளர்ப்பார்கள்; திரை = அலை; பரி = குதிரை; கால் = சக்கரம்; கூனல் = வளைந்த)
ஆண்குரங்குகள் பலவகையான பழங்களைப் பறித்துப் பெண் குரங்குகளுக்குக் கொடுத்துத் தழுவுகின்றன. அவற்றுள் சில பழங்களைப் பெண் குரங்குகள் சிதறுகின்றன. அந்தப் பழங்களைத் தேவர்கள் இரந்து கேட்கின்றனர். வேடர்கள் தேவர்களைத் தம் கண்களால் ஏறெடுத்துப் பார்த்து அழைக்கின்றனர். வானத்தில் செல்லவல்ல சித்தர்கள் மூலிகைகளை வளர்க்கின்றனர். மலையிலுள்ள அருவியின் அலைகள் எழுந்து வானத்தில் வழிந்து ஓடுகின்றன. இதனால் சூரியனின் குதிரைகளுடைய கால்களும் தேர்ச் சக்கரங்களும் வழுக்கி விழுகின்றன. இத்தகைய சிறப்புகளை உடையது குற்றால மலை என விளக்குகிறாள். இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்.