அகரமும் ழகரமும் சிகரத்தில்

6/26/20251 min read

அகரமும் ழகரமும் சிகரத்தில்

உலகெங்கணூம் தமிழ்மொழி பேசும் சுமார் எட்டுக் கோடி மக்கள் இருப்பதாகப் புள்ளி விவரத் தகவல்கள் சான்று பகர்கின்றன.

இது மன நிறைவளிக்கும் செய்தி.

என்றாலும் ஒரு குறை.

தமிழ்மொழி பேசப்படுகிறது.

சரி.

ஆனால் எவ்வாறு பேசப்படுகிறது?

எப்படி பேசினால் என்ன? பேசப்படுகிறதா இல்லையா? ஏராளமானோர் இவ்வாறு நினைப்பதும் தெரிகிறது.

எந்த விதமான காழ்ப்புணர்ச்சியுடனும் இதைச் சொல்லவில்லை. காரணத்துடன்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

தமிழ்மொழியை எப்படிப் பேசினால் என்ன? நாம் பேசுவது கேட்கின்றவருக்கும், அவர் பேசுவது நமக்கும் புரிந்தால் சரிதானே? வேறு என்ன இருக்கிறது? எனப் பலரும் சிந்திக்காமல் கேட்கின்றனர்.

நல்ல தமிழ் பேசாமல் இருப்பதற்கு அதுவே நியாயமான காரணமானால், சைகையாலேயே பேசிவிட்டுப் போகலாமே? ஆதி நாட்களில், மொழியே இல்லாதபோது, மனிதர்கள் இப்படித்தானே கருத்துப் பரிமாறியிருக்க வேண்டும் என எதிர்க்கேள்வி தொடுத்தால், வலுவற்ற காரணம் கற்பித்தோர் என்ன பதில் கூறுவார்கள்?

அவர்களைக் குறை சொல்லவில்லை. அவர்களுக்கு அது தெரியவில்லை.

முதற்கண், மனித குலம் தோன்றிய காலத்தைக் கணக்கிட எந்த ஆதாரமும் இல்லை. என்றாலும், ஐந்தறிவிலிருந்தது ஓர் அறிவு மேற்பட்ட மனித குலத்தின் மிகத் தொன்மையான மொழி தமிழ் என்பதைக் கண்டறிவதற்கு ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றன.

இந்தக் கோளில் மனிதர்கள் அனைவருமே முதன் முதலாகப் பேசியது தமிழ்மொழி என, அமெரிக்க மொழியியல் ஆய்வியல் நிபுணரான பேராசிரியர் அலெக்ஸ் கொலியர் என்பார், 1995 ஆம் ஆண்டில் தம் உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

கிமு-விற்கு முன் சுமார் 3800 ஆண்டு பழைமையான மொழியாக தமிழ்மொழி அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அவ்வாறாயின், தமிழ்மொழி, 5820 ஆண்டு வயது நிரம்பிய இளமையான மொழி!

ஆகத் தொன்மையான மொழியான தமிழைத் தொடர்ந்து சமஸ்கிருதம், அதன் பின் எகிப்திய மொதி, கிரேக்க மொழி, சீன மொழி, அராமெய்க் மொழி, ஹிப்ரூ மொழி, கொரிய மொழி, ஆர்மீனியன் மொழி, லத்தீன் மொழி என உலகின் ஆகத் தொன்மையான பத்து மொழிகள் பட்டியலிடப்படுகின்றன. சான்றுகளுடன் நிருபிக்கப்பட்ட, உலகமே ஏற்றுக் கொண்ட, அறிக்கை இது.

எண்களின் வரிசை தந்திருக்கும் தமிழ்மொழியில் ஒன்றில் தொடங்கி (1), அதன் பக்கத்தில் 22 சுழியங்கள் (0) எழுதி, மகாயுகம் எனச் சொல்லப்படும் எண் வரையும், அதற்கு அப்பாலும் தமிழில் நாம் எண்களை அடையாளம் கண்டிருக்கிறோம். அவற்றிற்குப் பெயர் வைத்துச் சொல்வே, உலகின் பல மொழிகள் திணறுகின்றன! (குறிப்பு: சுழியம் அதாவது பூஜியம் (0) என்னும் எண்ணை உலகுக்கு அறிவித்தவர் ஆரிய பட்டா என்னும் இந்தியரே!).

இன்றளவில் உலகில் சுமார் ஐயாயிரம் (5,000) மொழிகள் பேசப்படுவதாகவும் அவற்றுள், மூன்றில் ஒரு பங்கு ஆப்பரிக்காவில் பேசப்படுவதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், உலக மொழிகளின் ஆராய்ச்சியில் அதிமுக்கியமாகக் கருதப்படுவது, ஒரு மொழி குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வாழ்ந்ததற்கு சான்றாக விளங்கும் ஆதாரம். ஆதாரம் செப்பேடாக, பனையோலையாக, சிலை மேல் எழுத்தாக அல்லது குகைச் சுவர்களின் வரைபட ஓவியமாகவோ இருக்கலாம்.

அவ்வாறு ஆக முதன்மைக் காலத்தில் கிடைக்கப்பெற்ற உலக மொழிக்குச் சான்றாக விளங்குவது, கிமு 4-ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் தொல்காப்பியம். இதுவே, பனையோலையில் படைக்கப்பட்ட, தமிழின் மிகப் பண்டைய இலக்கணம். எழுத்து வடிவுப் பனையோலை, கிமு 4ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்றால், குறைந்தது ஆயிரம் ஆண்டுக்கு முன்னராவது நம் தமிழ்மொழி தோன்றிச் செம்மை அடைந்திருக்க வேண்டும்.

மேலும் ஐயாயிரம் ஆண்டுப் பழைமையானதாய்க் கருதப்படும் ஹரப்பா, மொகஞ்சதாரோ புதைபொருள்களில் காணப்பட்ட எழுத்துகளைக் கண்ணுற்ற ஈராஸ் பாதிரியார் என்பார், அவை தமிழ் எழுத்துகள் என்றும், அதனால் தமிழ் மிகத் தொன்மை வாய்ந்த மொழி என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவில் 179 இலக்கிய வளமொழிகளும் 544 கிளைமொழிகளும் இருப்பதாக, நூலறிஞரான அமரர் சுனிதி குமார் சட்டர்ஜி, தம் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். எனினும், அவையனைத்தினும் ஆகத் தொன்மையானதாக விளங்குவது தமிழ்மொழியே.

உலகின் ஆகத் தொன்மையான மொழியாதலால், தமிழ்- மொழியின் தாக்கம் ஏராளமான மொழிகளில் இருக்கின்றது. அது வெவ்வேறு மொழிகளுடன் கலந்து அந்தந்த மொழியாகவே மாறிவிட்ட காரணத்தால், அது அப்படியே அந்த மொழியாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.

ஆங்கிலம், இந்தி, கொரிய மொழி, தென்னாப்பிரிக்காவின் கெமரூன் நாட்டு மொழி, மலாய் மொழி, இந்தோனீசிய மொழி எனப் பட்டியலிடலாம்.

எனினும் அதிகமான சொற்கள் ஆங்கில மொழியில் இடம்பெற்றிருக்கின்றன. உதாரணமாக, கட்டுமரம் என்பது ‘catamaran’ என்றும், கஞ்சி என்பது ‘congee’ என்றும், காசு என்பது ‘cash’ என்றும், முருங்கை என்பது ‘moringa’ என்றும், ஆனைகொன்றான் (ஒரு பூதாகர வகைப் பாம்பு) ‘anaconda’ என்றும் இன்னும் ஏராளமாகவும் தமிழ்ச்சொற்கள் ஆங்கிலத்திற்குக் குடிபெயர்ந்திருக்கின்றன.

கொரிய மொழியில் பெற்றோர்கள் அம்மா, அப்பா என்றே இன்றும் குறிப்பிடப்படுகின்றனர். மலாய் மொழியில் (இ)ம்மாக், பாப்பாக் (அல்லது) அய்யா என்றுமே கூப்பிடுவார்கள்.

தமித்மொழியில் மிகக் கறைவாக 30 எழுத்துகள் இருப்பதாகவே தொல்காப்பிய நூலில் கூறிருக்கிறார் தொல்காப்பியர்.

உயிரும் மெய்யுமே இணைந்து உயிர்மெய்யாகின்றன. அவை 30 எழுத்துகள். மற்றவை சார்பு எழுத்துகள். அதன் காரணமாகவே

“எழுத்தெனப் படுவ

அகர முதல னகர இறுவாய்

முப்பது என்ப” என வரையறுக்கின்றார் தொல்காப்பியர்.

நன்னூல் இலக்கண நூலும், “உயிரும் உடம்புமாம்

முப்பதும் முதலே” எனக் கூறும்.

உலகில் இன்று மிக அதிகமாகப் பேசப்படும் மொழியாக விளங்குவது, மிக இளமையான (சுமார் 300 ஆண்டுகளே புழக்கத்திலிருக்கும்) ஆங்கில மொழி! (இன்று தமிழ்மொழி பேசுவோர் இரு சொற்களில் ஒன்று ஆங்கிலச் சொல்லாகப் பேசும் அவல நிலை இருக்கின்றது!)

ஆங்கில மொழியில் இருபத்தாறு எழுத்துகளே இருக்கின்றன. மொழிபெயர்ப்பில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழியும் அதுவே.

என்றாலும், தமிழறிந்தவர்கள் மொழிபெயர்ப்புக்கு தமிழ் எந்த அளவுக்குப் பயன்படுகிறது என்பதை அறிவர். ஆங்கில மொழியின் ‘F’ என்னும் தனித்தன்மையான ஒலி தவிர, மற்ற எல்லா உச்சரிப்புக்கும் தேவையானவை, தமிழ்மொழியில் இருப்பதையும் அறிவர்.

மொழிபெயர்ப்பிற்குப் (translation) பேருதவியாய் விளங்கும் தமிழ்மொழி, ஒலிபெயர்ப்பிற்கு (transliteration) மிகச் செம்மையான மொழி என்பதை, அதில் ஈடுபட்டிருப்பவர்கள் அறிவார்கள்.

ஆங்கிலத்தில் ‘Iraq’ நாட்டின் பெயரைத் தமிழிலும் ஈராக் என்றே எழுதுவோம், உச்சரிப்போம். ஆயின், மாண்டரின் மொழியில் அதை ‘ஈலாக்கூ’ என்றே சொல்வர். அதைக் கேட்கும்போது, அது மொழிபெயர்ப்பா இல்லை அது ஒலிபெயர்ப்பா என்னும் ஐயமே எழும்.

இவ்வாறாக ஏராளமான ஆதாரங்கள் தமிழின் பழமைக்குக் கட்டியம் கூறுகின்றன!

மேலும், தமிழ்மொழியின் இலக்கண ஆதாரமாக விளங்கும் தொல்காப்பியத்திற்கு முன்னர், தொல் திராவிடம் அல்லது மூலத் திராவிடம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தொல் திராவிடத்தில் பத்து உயிர் எழுத்துகள் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது. ‘ஐ’, ‘ஒள’ ஆகிய இரு எழுத்துகள் அதில் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. அதன் பயனாகவே, ‘ஐ’ ‘ஒள’ என்னும் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளுக்கு ‘அய்’ எனவும், ‘ஒள’ ‘அவ்’ எனவும் இன்றளவும் தமிழில் பயன்படுத்தப்படுகின்றது. (உதாரணத்திற்கு, அய்யர், அவ்வையார் முதலியவை).

ஆயினும் மூலத் திராவிடமொழி என்பது மொழிநூலகரின் ஊகமேயன்றி முடிந்த முடிவில்லை என்னும் வாதமும் நிலவுகின்றது!

பழந்தமிழ்மொழியில் சுமார் இரண்டு லட்சத்து எண்ணாயிரம் தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன. என்றபோதும், காலவோட்டச் சுழற்சியினால், தமிழ்நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட பல படையெடுப்புகளால், தமிழுக்குப் பின் தோன்றிய சமஸ்கிருதம் தமிழுடன் கலந்தது. பாலையும் நீரையும் பிரித்துண்ணும் அரிய திறன் இலக்கியக் கதாபாத்திரமான அன்னப் பறவையிடம் இருந்தாக புகழப்பட்டது. ஆயினும், தேனினும் இனிய தமிழ் எது என்பதை அறியும் அரிய இலக்கண அன்னப் பறவை, அந்தக் காலக்கட்டத்தில் பலரின் கண்களில் தென்படவில்லை போலும்..

தமிழ்நாட்டில், மணிப்பிரவாளம் என்ற கலப்பட பாணி, பல காலம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

இருண்ட காலத்தில், ஒளி தரும் ஏதேனும் மின்மினிப் பூச்சியாவது வராதா எனத் தமிழ் உலகே மெளனமாக விக்கித் தவித்த தருணத்தில், ஆயிரமாயிரம் சூரிய ஒளிவெள்ளம் சிந்திய நம்பிக்கை நாயகர் ஒருவர் தமிழ்நாட்டில் உதயமானார்!

நிறைமொழி மாந்தர், பன்மொழியறிஞர், தனித்தமிழ் இயக்கத் தந்தை என உலகமே அறிந்துகொண்டு, இன்றளவும் உலகத் தமிழர்களின் மனங்களில் பதிந்திருக்கும் அந்த பேரறிஞர்தான் வேதாச்சலமாக நாகபட்டினத்தில் பிறந்தார். தாம் நோற்ற தனித்தமிழ் நோன்பின் காரணமாக, தம் இயற்பெயரையே மறைமலை அடிகள் என மாற்றிக்கொண்டார்.

தனித்தமிழ் புரட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி, தமிழ் மொழியை மட்டுமே பேசி, எழுத வேண்டும் என்னும் வேட்கையை மக்கள் மனதில் கொழுந்துவிட்டெரியச் செய்தார்.

தாம் போதித்ததைக் கடைப்பிடித்து, முன்னுதாரணமாகவும் வாழ்ந்தார்.

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஒப்பாரும் மிக்காறுமற்றவராக விளங்கிய மறைமலை அடிகளார், தம் வாழ்க்கை முறையை தாம் கொண்ட கொள்கைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டார்.

அதன் பயனாக, தம் மக்களுக்குத் தூய தமிழ்ப் பெயர்களையே இட்டார். அவர் மகன் பெயர் திருநாவுக்கரசு. அடிகளாரின் மகள்பெயர் நீலாம்பிகை.

மகன் திருநாவுக்கரசின் மகனுக்கு சூட்டப்ப்பட்ட பெயர் தாயுமானவன்.

மறைமலை அடிகளாரும் அவரின் தவப் புதல்வியுமான நீலாம்பிகையும் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் கருத்துச் செறிவுமிக்க பாடலைப் படித்து இன்புற்றிருந்தனர்.

1916-ஆம் ஆண்டு அடிகளார் தம் வீட்டுத் தோட்டத்தில் மகள் நீலாம்பிகையாருடன் உலாவிக் கொண்டிருந்தபோது, வள்ளலார் அருய திருவருட்பாவில்,

பெற்ற தாய் தனை மகமறந்தாலும்

பிள்ளையைப் பெறும்தாய் மறந்தாலும்

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்

உயிரை மேவிய உடல் மறந்தாலும்

கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்

கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்

நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்

நமசிவாயத்தை நான் மறவேனே

என்ற பாட்டைப் பாடி, தம் மகளிடம் “இப்பாட்டில் ‘தேகம்’ என்ற வடசொல்லை நீக்கி யாக்கை என்ற தமிழ்ச்சொல் இருக்குமானால் செய்யுளின் ஓசையின்பம் இன்னும் இனிமையாக இருக்கும்” என்றார்.

"பிற மொழிச்சொற்கள் வழங்கி வருவதால் தமிழ்ச் சொற்கள் மறைந்து விடுகின்றன” என்றும் சொன்னார்.

மறு கணமே நீலாம்பிகையார் தந்தையிடம், "நாம் இனி அயன்மொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலே பேசுதல் வேண்டும். அதற்கான முயற்சிகளைக் கைவிடாது செய்தவோம்" என்று ஆர்வத்துடன் மறுமொழி கூறினார்.

தனித்தமிழ் இயக்கம் 1916-இல் ஏற்பட்டது.

மகளின் அறிவுமிகு வேண்டுகோளை ஏற்று, சுவாமி வேதாசலம் என்ற தம் பெயரை மறைமலையடிகள் என்று மாற்றிவைத்துக் கொண்டார். அது முதல் அடிகளார், தனித்தமிழ் எழுதலாயினார்.

சொற்கள் தனித்தமிழில் கிடைக்காதபோது, புதிய சொற்களைத் தமிழில் உண்டாக்கி எழுதினார்.

மறைமலை அடிகளார் வித்திட்ட அந்தத் தனித்தமிழ் விதைதான், துளிர்விட்டு, வேரூன்றிய தமிழ்மொழி, தமிழ்நாட்டில் தழைத்தோங்கிய உரிமைக்குரிய ஆல விருட்சமாக இன்றும் நிலைக்கக் காரணமாயிற்று.

தமிழ்மொழிக்குச் சுழி போட்டவர் மறைமலை அடிகளார். தமிழ்நாட்டில் அவர் ஏற்றிய அந்தத் தமிழ்த் தீபந்தம், அவரின் மறைவுடன் மங்கிவிடவில்லை, முடங்கிவிடவில்லை.

அவரைத் தொடர்ந்து, பாவேந்தர் பாரதிதாசனார், மு.வரதராசனார், அ.கி. பரந்தாமனார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி எனச் சங்கிலித் தொடராக தமிழறிஞர்கள் பலர், தமிழுக்கு அரணாக இருந்து அதைக் காத்தனர். இன்று வரையிலும், கணக்கிலடங்காப் பலர், தாய்த் தமிழுக்குத் தங்கள் பங்காற்றி வருகின்றனர்.

ஆயினும், உலகமெங்கும் தமிழ்மொழி தடையின்றித் தழைக்குமா என்னும் பெரிய அச்சம் ஏற்பட்டிருக்கின்றது.

சமஸ்கிருத மொழிக் கலப்பைக் கூட ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடும். ஆயினும், எந்த வகையிலுமே சம்பந்தமில்லாமல், தமிழ் மொழியினுள் ஆங்கிலமொழியின் ஊடுருல்தான், ஆச்சரியமிக்க தடைக் கல்லாய் வீற்றிருக்கிறது!

இம்மியளவும் தொடர்பே இல்லா இரு வேறு மொழிகள்தான் தமிழும் ஆங்கிலமும். அவை ஒரே இடத்தில், ஒரே காலக்கட்டத்தில் உற்பத்தியான மொழி ஊற்றுகளல்ல. அவை ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளும் அல்ல.

எழுத்து முறை, இலக்கண இலக்கிய ஆதாரம், வாழ்வியல் வரலாற்று வகையிலும் முற்றும் அவை மாறுபட்டவை.

முற்காலத்தில் உலகைக் கைப்பற்றிக் கட்டியாள ஆங்கிலேயர்கள் உலகெங்கும் படையெடுத்தனர்.

வருமானம் ஈட்டத்தரும் வர்த்தகம் என்னும் வலுவான இணைப்பாகவும், தொடர்பு மொழியென்னும் பிணைப்புக் கயிறாகவும் ஆங்கில மொழி இன்று உருமாறியிருப்பதாலும், அதைப் புழங்கும் பழக்கம், உலகெங்கும் காட்டுத் தீயாகப் பரவியிருக்கிறது.

அதனால், உலகின் பெரும்பாலான நாடுகளில், வர்த்தகம், பேச்சு, எழுத்து என நடைமுறையாகவும், ஏன், வாழ்க்கை முறையாகக் கூட ஆங்கில மொழிதான் கோலோச்சுகின்றது.

முதற்கண், ஆங்கிலமொழி பெற்றிருக்கும் முக்கியத்துவம். அடுத்து, “என் தாய்மொழி தமிழ்” என்னும் சித்தாந்தமெல்லாம் இன்றைய நிலையில் இரண்டாம் சிந்தனையாகிவிட்டது.

இன்றைக்கு, உலகின் பெரும்பாலான நாடுகளில், ஆங்கில மொழியே, இரண்டாம் மொழி என்னும் தகுதி பெற்றிருக்கிறது! என்றாலும், அதுவே முதல் மொழி போலப் பயன்படுகின்றது.

ஒரு காலத்தில், மக்கள், தம் மொழியில் சிந்தித்துத்தான், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கருத்துரைத்தார்கள். ஆனால் இன்றோ, தத்தம் தாய்மொழியில் இயல்பாகச் சிந்திப்போர், ஆங்கில மொழியில் பேசுவது, பன்மடங்கு பெருகிவிட்டது! அதன் விளைவு?

தமிழர்கள் என்னும் முறையில் உற்றுக் கவனித்தால், தமிழ் மொழிப் புழக்கம் பெருமளவு குறைந்துவிட்டது தெரியும்!

வாழ்வதற்குப் பொருளாதாரம் என்னும் சிந்தனையோட்டம் சுழலும்போது, தமிழ்மொழி என்னும் நினைப்பு எங்ஙனம் வரும்?

பெருவாரியான உலக மக்களிடம், ஆங்கிலமொழித் தராசுத் தட்டில்தான் அதிக எடை ஏறியிருக்கிறது!

நடுக்கடலில் பிரயாணம் மேற்கொள்ளும் கப்பல், இயற்கைப் பேரிடர் காரணமாகப் புயலையும் கடல் கொந்தளிப்பையும் எதிர்நோக்குவது இயல்பே.

ஆயினும், கப்பலையே பெருங்கடல் விழுங்கச் செய்யக் கூடிய, சிறு துவாரம், அந்தக் கப்பலுக்குள் இருப்பதே பேராபத்தை ஏற்படுத்தும்!

தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களும், தமிழ் ஊடகங்களில் பணியாற்றுவோரும் மட்டும் அதற்கு விதிவிலக்கு!

தமிழ் மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ, அங்கெல்லாம்

இன்று இந்த நிலையைக் காண முடிகின்றது!

நாட்டு வளர்ச்சியில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கும் அரசாங்கங்கள், ஆசிரியர்த் தொழிலின் உன்னதம் அறிந்து, தொடர்ந்த ஆதரவையும் அங்கீகாரத்தையும் நல்வி வருகின்றன. அதனாலேயே, பள்ளிக்கூடங்களும், கல்விக்கூடங்களும் அரசாங்கங்களின் நேரடிப் பார்வையில் செயல்படுகின்றன.

ஆனால், ஊடகங்களில் பெரும்பாலானவை அரசாங்களின் நேரடிப் பார்வையில் இல்லாது, தனியார்மயமாகின்றன. அதனால், தகவல் திரட்டி அறிவிக்கும், கற்பிக்கும், களிப்பூட்டும் பணிகளை ஊடகங்கள் செய்வதோடு, அவ்வாறு செயல்பட சுயமாகப் பொருளீட்டும் கடமையையும் நிறைவேற்ற வேண்டும்.

அதனால், அவ்வாறான போட்டி மிகுந்த அமைப்புகளை வழிநடத்தும் நிர்வாகத்தினர், தங்கள் ஊடகங்களில், அறிவுறுத்தும் வாழ்வியல் தத்துவங்களைப் போதிக்கும் பாணியைப் கையாள முடியாது. களிப்பூட்டும் முறையில் செயல்பட்டால்தான், தகவல் ஊடகங்கள், மக்களின் கவனத்தை ஈர்க்க இயலும்.

அதனாலேயே, மனமகிழ் ஊடக நிறுவனங்கள், அவற்றின் உள்ளடக்க நிகழ்ச்சிகளை, சிந்தனையைத் தட்டி எழுப்பும் சீரிய நோக்குடன் படைப்பதில்லை.

மக்களை மகிழ்விக்கும் நோக்கத்திலேயே அவை செயல்படும். களிப்பூட்டலே முதல் கடப்பாடு. அதன் பிறகே மற்றவை.

இவையெல்லாம், மேற்கத்திய நாடுகளின் படைப்பு முறைத் தாக்கம்.

குறிப்பாக, உலகெங்கும் வாழும் இளையர் சமுதாயத்திற்கு, மேற்கத்திய நாடுகளின் இளையர் நடவடிக்கைகளின் மீது அப்படியொரு மோகம்.

உடையணிவது ஆகட்டும், நடையாகட்டும், கலை ஈடுபாடாகட்டும், உணவாகட்டும், பேசும் விதமாகட்டும், இரு பாலாரும் பழகும் நடைமுறையாகட்டும், நாகரிகமாகட்டும், எல்லாமே பொதுவாக மேற்கத்திய நாடுகளின் நாகரிக பிரதிபலிப்பாகத்தான் இருக்கின்றது.

எவ்வளவுதான் மேற்கத்திய மோகத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாலும், அந்நாட்டவராக மாற நம்மால் முடியாது! அவர்களும் அதை ஏற்கமாட்டார்கள். நம்மை, அவர்கள் வகையறாவாகச் சேர்க்கமாட்டார்கள் என்பதை, இளையர் மறந்துவிடுகின்றனர்.

மேற்கத்திய நாகரிகமானது, நம்மவரின் நாகரிகத்திற்குப் பல நூற்றாண்டுகள் கழித்துத்தான் உதயமாயிற்று!

நம் இளைஞர்களை உற்றுக் கவனித்தோமானால், ஒற்றைக் காதில் தோடு அணிந்திருப்பதும், உடலெங்கும் தெரியும், தெரியாத பாகங்களில் பச்சை குத்திக்கொள்வது, படிய வாராமல், பரட்டையாக தலைமுடியை வைத்துக்கொள்வது, அல்லது பாளம் பாளமாக தலைமுடியை மழித்துவிட்டு, பாத்தி கட்டிய வயல் போல தலையை வைத்திருப்பது, அல்லது முழுமையாக தலைமுடியை மழித்து, கபாலத்தில் பச்சை குத்திக்கொள்வது போன்ற நடவடிக்கையெல்லாம் மிகவும் பிரபலமாக இருக்கின்றன.

இவையெல்லாம் என்ன, மேலை நாடுகளில் தொடங்கிய பழக்க வழக்கங்களா?

இல்லை!

அவை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் இருந்தவைதாம்!

அப்போதெல்லாம் பிறந்த குழந்தைகளுக்குக் இரு காதும் குத்தி, கடுக்கண் இட்டு விழா எடுத்தனர் நம்மவர். இவன் தமிழ்ப் பரம்பரை வழிவந்தவன் என்பதை உணர்த்தவே நம் முன்னோர் அவ்வாறு செய்தனர்.

பணம் படைத்தவர்கள், மன்னர் பரம்பரை சார்ந்தவர்கள், பண்டிதர் பரம்பரைவழி வந்தவர்கள், ஏன் சாமானியர்கள் கூட காதணிவிக்கும் வைபவம் ஏற்பாடு செய்து, புதிதாகப் பிறந்த ஆண், பெண் குழந்தைகளுக்குக் காதணி அணிவிப்பார்கள்.

பிறந்த குழந்தை காணாமல் போய்விடுமோ என்னும் பயம் குழந்தையைப் பெற்றவர்களுக்கு ஏற்படுவது இயல்பே. எனவே, நிரந்தரமான அடையாளக் குறியீடு இடும் பொருட்டு, நெற்றியின் மத்தியில், புருவங்களுக்கிடையில் மிகச் சிறிய வட்ட வடிவிலான குறியீட்டைப் பச்சைக் குத்துவார்கள். அந்தக் குறியீடு ஆயுள் முழுக்க, குத்திய இடத்திலேயே இருக்கும். இவர், இன்னார் என்னும் அடையாளம் காட்டும்.

இந்தப் பழக்கம் வெகு நாட்கள் கடைப்பிடிக்கப்பட்டது. எனினும், காலவோட்டத்தில் தேய்மானம் கண்டது. பச்சைக் குத்தும், காது குத்தும் பழக்கங்கள் தமிழர்களால் விரைவில் மறக்கப்பட்டன; துறக்கப்பட்டன.

காலப்போக்கில், அது செய்வதினின்றும் நிறுத்தப்பட்டது.

ஆயினும், மேலை நாட்டவர், நம் பச்சைக் குத்தும் பாரம்பரியத்தைப் பின்பற்றத் தொடங்கினர். சிறு பொட்டாக நாம் இட்ட வட்டத்தைக் கண்ட அவர்கள், அதை விரிவாகக் கை, கால், உடல், முதுகு, முகம் என முழுமையாகவே உடலெங்கும் பச்சைக் குத்தத் தொடங்கினார்கள்.

அதன் விளைவாக, நம்மவர்கள், நம்மைப் பின்பற்றியவர்களை, பின்பற்றத் தொடங்கியிருக்கின்றனர்.

நாம் பல பயன்மிகு நடவடிக்கைகளுக்குப் பாதை அமைத்தோம். ஆனாலும், நம் முன்னோடிப் பாதைகளைக் கொண்டு, தமக்குத் தேவைப்பட்ட மாதிரியாக அமைத்துக் கொண்ட விதத்தில், நம்மவர்கள் அறியாமலேயே, பின்தொடர்ந்து பயணம் செய்கின்றனர்.

இவ்வாறு, ஆதிக்காலத்தில் நாம் போட்ட ஒற்றையடிப் பாதைகள் காலப்போக்கின் கட்டாயத்தால் எட்டுவழிச் சாலைகளாக வளர்ச்சி அடைந்தாலும், பிற நாடுகளைப் பின்பற்றியே செயல்படுகிறோம்.

உலகுக்கு வாழ்க்கைக் கூறுகளைப் போதிக்கவல்ல தமிழர்கள், கிமு 3,800 ஆம் ஆண்டுக்கு முன் தோன்றியவர்கள். அதன் பயனாக நாகரிகம், மொழியியல், பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றில் முன்னுதாரணமாக விளங்கினோம்.

தோராயமாக, 1010 ஆண்டுக்கு முன்னர், இராஜ இராஜ சோழ மன்னர் அருள் வர்மன் நிர்மாணித்த தஞ்சை பெரிய கோவிலின் கட்டடக் கலை, இன்றளவும் உலகத்தோரை மூக்கின் மேல் விரல் வைத்து, வியக்கச் செய்கின்றது. அவரின் கட்டுமான செயல்முறைத் திட்டம் இன்று உலகத்திற்குப் பேரதிசயமாகவே விளங்குகின்றது.

இவ்வாறெல்லாம் முன்னணிப் பாதையில் கொடியேந்தி, உலகை வழிநடத்திய தமிழர்கள், உலகின் முதல் மொழியான தமிழ்மொழித் தரத்தை உரிய இடத்தில் தக்கவைத்துக் கொள்வதில், மெத்தனமாக இருந்துவிட்டோம்.

அதன் விளைவு?

தெய்வத் தமிழ்மொழியிடம் என்றோ இருந்த புனிதத்தன்மை, இன்று அரிதாகிவிட்டது. வசதியாக வேறு மொழிகளைக் கற்றுக்கொண்டு, நம் தாய்மொழியின் அருமையை உணராது, அதைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டாது, அதை தற்போதைய பிழைமிகு நிலைக்குத் தாழ்த்திவிட்டோம்.

அதனால், எந்த ஊடகத்திலும், இன்று உற்ற தமிழ்மொழியைக் காணாது, தேட வேண்டியிருக்கிறது.

உலகெங்கணும் ஆங்கில மொழி மட்டுமே வர்த்தக மொழியாக; அனைத்துலக மொழியாக விளங்குகின்றது. எனவே, தமிழால் என்ன பயன் என கேள்வியெழுப்பி, ஏராளமானோர், தம் தாய்மொழியைக் கற்றறியும் கடமையைக் கைவிடுகின்றனர்.

அவ்வாறு செய்வதால், செம்மொழியான நம் தாய்மொழியைத் தடயமின்றி துடைத்தொழிப்பதற்கு நிகராகும்.

“தமிழ் இனி மெல்லச் சாகும்” என, தமிழ்மொழி நீண்ட ஆயுளுடன் நிலைக்கும் என்பதைப் பார்புகழ் கவிஞன் பாரதி சொன்னதற்கு மாற்றுப் பொருள் கற்பித்து, நம் மொழி காலப்போக்கில் மறைந்துவிடும் என்பதை ஞாபகப்படுத்துவது போலாகிவிட்டது!

கற்றுக்கொண்டால், தமிழ் போன்ற எளிய மொழி இராது என்பதைக் கற்றுணர்ந்தவர்கள் கூறுவர். அது வெறும் வாய்ச்சொல் மட்டுமல்ல. உண்மை.

தமிழ்மொழி எவ்வாறு, யாரால் உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டறிதல் எளிதன்று. அது, தமிழன் கண்டறியக் கூடியதன்று. எனினும், செப்பேடுகளிலும், பனையோலைகளிலும், குகைகளிலும், கல்லிலும் செதுக்கப்பட்ட எழுத்துகள் மட்டும் பல நூற்றாண்டுகளாகத் தொல்பொருளாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் கிட்டியிருப்பதால், நம் தமிழ்மொழி இறவா மொழியாக வாழ்ந்து வந்திருக்கிறது. எனினும், காலப்போக்கில், அந்த எழுத்துகளில் மாற்றம் நிகழ்ந்தே வந்திருக்கின்றன.

தமிழ் எழுத்துகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்டுத்தி, தமிழை எளிமைப்படுத்தியோருள் குறிப்பிடத்தக்கவர், கிபி 1700-இல் இத்தாலியிலிருந்து, சமயப் பணி முன்னிட்டு தமிழகம் வந்த காண்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி என்னும் கிறிஸ்துவப் பாதிரியார்.

தமிழ்மொழி மீது கொண்ட அதீத நாட்டத்தினால், தம் பெயரையே வீரமாமுனிவர் என மாற்றிக்கொண்டார். “கொடுந்தமிழ்“ என்னும் அரிய இலக்கண நூலை எழுதித் தொகுத்தார்.

அவரின் வருகைக்கு முன்னர், குறில், நெடில் ஆகிய எழுத்துகளில் மயக்கம் இருந்தது. அது புரிந்தகொள்வது சிரமமாக இருந்தது.

குறில் எழுத்து ஒரு மாத்திரை கால அளவும், நெடில் சொற்கள் இரு மாத்திரை கால அளவும் சொல்லப்பட வேண்டும். என்றாலும், எழுத்து வடிவில் அவை குழப்பம் ஏற்படுத்தின.

கெ, பெ, செ போன்ற குறில் எழுத்துகளில் வரும் க, ப,ச எழுத்துகளில் புள்ளி வைத்தால் அவை குறில் என்றும், புள்ளி இல்லாதவையே நெடில் என்றும் கடினமாயிருந்ததை மாற்றினார்.

அவ்வாறான சொற்களில் புள்ளி வைப்பதை அகற்றப் பரிந்துரைத்தார். ஒற்றைக் கொம்புடன் (ெ) புள்ளியின்றி வருவன குறில் சொற்கள் என்றும், இரட்டைக் கொம்புடன் (ே) வருவன நெடில் சொற்கள் என்றும் மாற்றியமைத்தார். அந்த மாற்றத்தைத் தொடர்ந்து,படிப்பதும் எழுதுவதும் எனிமையானதால், ஏராளமானோர் மொழி கற்கத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டுமல்ல, இன்னும் ஏராளமான மாற்றங்களையும் செயல்படுத்தினார், தற்காலத் தமிழ் வரிவடிவின் தந்தையான வீரமாமுனிவர்.

‘எ’ என்னும் எழுத்தை நெடிலாக்க ‘ஏ’ என கீழே கோடிழுத்துப் பயன்படுத்தவும், ‘ஒ’ என்ற எழுத்தை உட்புறமாகச் சுழித்து எழுதினால், அது நெடிலாகும் எனப் போன்ற பல்வேறு அழகிய சீர்திருத்தம் செய்தவர் வீரமாமுனிவர்.

காலந்தோறும், இப்படி வந்த மாற்றங்கள் ஏராளம். ஆகக் கடைசியாக, தமிழ்நாட்டில் சுமார் நாற்பது ஆண்டுக்கு முன்னர் ஏற்பட்ட மாற்றம்தான், ‘ஐ’ என்னும் சொல்லுடன், மேலிருந்து சுழித்து ‘ன’, ‘ண’ எழுத்துகளைச் சேர்த்து எழுதியபோது, பழைய எழுத்துகள், ‘னை,’ ‘ணை ‘எனப் புதிதாக மாற்றம் பெற்றது.

இவ்வாறு நிகழ்ந்த இன்னும் எவ்வளவோ மாற்றங்களைச் சொல்லலாம். அதற்கு நிறைவே இராது.

இப்படி, காலந்தோறும் பட்டை தீட்டப்பட்ட வைரமாக மெருகேற்றப்பட்ட தமிழ்மொழி, இன்று, தமிழ்மொழி கற்றுக்கொள்வோரின் நாவன்மை குறைவாலும், மொழி கற்கும் நிராகரிப்பாலும், ஏராளமான பிழைகளுடன் எழுதப்படுகின்றது, பேசப்படுகின்றது.

அறிந்தே எவரும் ஆற்றினுள் குதிப்பதில்லை. அறியாமையே அதற்குக் காரணம். எனவே, அறிந்தவற்றை, அறியாதோருக்குக் கற்பித்தல், அறியாமையை நீங்கும்.

இன்றைய நிலையில், அவ்வாறு ஏராளமானோருக்கு மொழி கற்பிக்கும் வாய்ப்பும் வசதியும் ஊடகங்களுக்கே உண்டு.

எனவே, தமிழ்மொழியின் பிழையற்ற பயன்பாட்டைக் கற்றுத் தரவேண்டியது ஊடகங்களின் தார்மிகக் கடமையாகும். என்றபோதும், தமிழ்மொழித் திறனை மேம்படுத்திக் கொள்ளவேண்டிய ஓர் இக்கட்டான சூழ்நிலை உலகளாவிய பல வானொலி, தொலைக்காட்சி நிலையங்களுக்கு நிலவுகின்றது.

ஊடகங்களில் பணிபுரிவோருக்கு முதற்கண் அடிப்படை இலக்கண ஞானமும் சொல்லாட்சியும் வேண்டும். இல்லாது போனால், தமிழைத் தொடர்ந்து வாழவைக்கும் கடமை நிறைவேறாது வீணாகும்.

அவ்வாறான மாற்றம் நிகழ்ந்தால்தான், ஊடகங்களைக் பேரார்வத்துடன் கேட்டு இன்புற்றிருக்கும் எண்ணற்ற நேயர்களும், இரசிகர்களும் அவற்றின் வழி, தமிழ்மொழியைப் பிழையறப் பேசவும் எழுதவும் கற்பார்கள்.