ஆறறிவு மனிதர்கள்
6/26/20251 min read
ஆறறிவு மனிதர்கள்
சுற்றிப் பார்த்தால்தான் உண்மை நிலை புரியும்.
நம் தலைமுறையினரின் பழைமையால், அவர்கள் செய்த வாழ்வாதாரத் தொழில்கள் மெல்ல மறைந்துவிட்டன.
பஞ்சு மிட்டாயும் பட்டாணிக் கடலையும் விற்றவர்கள், வீட்டுக்கு வீடு பசும்பால் ஊற்றியவர்கள், மாறிவரும் நாகரிகத்தைத் துணியில் தைத்துப் பதிக்கும் தையற்காரர்கள், மனிதக் கழிவுத் தொட்டிகளை அருவெறுப்பின்றி தோளில் தூக்கிச் சென்று ஊரைத் தூய்மைப்படுத்திய துப்புரவாளர்கள்.. இவர்கள் அனைவருமே இருந்த இடமோ தடமோ தெரியாது மறைந்துவிட்டார்கள்.
கால மாற்றமும் அறிவியல் முன்னேற்றமும் அதற்கு முக்கியக் காரணம்.
முற்காலத்தில், நம் மூதாதையர் எழுதுகோல் குச்சியால் எழுதினார்கள். அடுத்த தலைமுறையினர், மை ஊற்றுப் பேனாவால் எழுதினார்கள். இன்றோ கணினிப் பொறியிலிருக்கும் சுட்டியாலேயே எழுதுகின்றனர்.
அறிவு வளர்ச்சியின் பெருக்கம், நாம் செயல்படும் முறைகளை மேம்படுத்துகின்றன. அவ்வாறன வளர்ச்சி தடுக்க முடியாதது. அபரிமிதமான அறிவு மேம்பாடு, இன்றைய மனித இனமே, இயந்திரங்களைச் சார்ந்த, செயற்கை மதிநுட்பம் என்னும் நிலையை உருவாக்கியிருக்கின்றன. அதன் விளைவு...?
முன்னாளில் இருந்த தையற்காரர்கள், வாடிக்கையாளர்கள் சொன்ன அளவில், விதத்தில், வடிவமைப்பில் புதுத் துணிகளைத் தைத்துக் கொடுத்தார்கள். ஆனால் இன்றோ…?
ஆடைகள், அளவற்ற வடிவமைப்புகளில், அதி நாகரிக பாணிகளில் வாங்கக் கிடைக்கின்றன. இயந்திரங்கள் உருவாக்கும் மாதிரிகள் ஏராளம். மனிதர்கள் வடிவமைக்கும் ஆடைகளை விட இன்று இயந்திரங்கள் வடிவமைக்கும் ஆடைகளே அதிகம் கிடைக்கின்றன. இது உண்மை நிலை...!
காலத்தால் மறைந்த, கைத்தொழில் திறனாளர்கள், கரைந்தே போனார்கள். அவர்கள் கைத் திறனும் அங்ஙனமே மறைந்துவிட்டன. அவர்கள் குலத்தொழிலாக விளங்கியவை, அவர்களின் மறைவோடு காணாமல் போய்விட்டன.
நேற்று என்பது நினைக்கெட்டாத வரலாறு ஆகிவிட்டது. இன்று நாம் வாழும் காலமோ, மறுகணமே மாறும் வல்லமை பெற்றது. கண்டுபிடிப்புகள், மேம்பாடுகள், புதுமைகள், மாற்றங்கள் போன்றவை அடுத்தடுத்து சரமாரியாக நிகழ்கின்றன. கையடக்கத் தொலைபேசிகளும் கணினிகளும் அவற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையின் விதியே.
வாழ்ந்து மறைந்தவர்கள், புது யுகத்தின் போட்டிமிக்க வாழ்கை முறை அறியார். மாற்றம் நிகழும் இக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் முதியவர்களோ, பழையதிலிருந்து மாற முடியாத, புதியதற்கு பழக்கப்பட முடியாத இடைநிலையில் தடுமாறுகின்றனர்! கடந்த காலம் அவர்களுக்குச் சுகம், இன்றோ அவர்களுக்குச், அது அறியாச் சுமை. அவர்களைக் குறை கூறியோ, பழித்தோ பயனில்லை.
இந்த பூமி, ஒரே வேகத்தில்தான் சூரியனை இன்னும் சுழன்றுகொண்டிருக்கிறது. ஆயினும், ஆறறிவு மனிதர்களுக்கு மட்டும் நாகரிகமும் காலமும் அதிவிரைவாக நிகழ, (அவர்களின் இயற்கை அறிவை விஞ்சிய) செயற்கை அறிவே காரணம்!